Last Updated : 19 May, 2025 05:22 PM

 

Published : 19 May 2025 05:22 PM
Last Updated : 19 May 2025 05:22 PM

பழநியில் 18-ம் நூற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுப்பு: உலக நீதிநூலின் மாறுபட்ட பிரதி

பழநியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி அடுத்த நெய்க்காரபட்டி அருகேயுள்ள க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தோம். அப்போது, கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என்பதும், ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரிய வந்தது. ஓலைச் சுவடியின் மேல் ‘ராமக் குடும்பன்’ என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

இவர் உலக நீதியை பிரதி எடுத்து எழுதியவராகவோ அல்லது ஓலைச்சுவடியின் அந்தக்கால உடமையாளராகவோ இருந்திருக்க வேண்டும். உலகநீதி எனும் நீதி நூலை இயற்றிய உலகநாதர் என்பவர் முருக வழிபாடுடைய சைவப் புலவர். திருவாரூரைச் சேர்ந்தவராக அறியப்படும் இவர் இயற்றிய நீதிபோதனைப் பாடல்கள் 'உலகநீதி' எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. 13 விருத்தப் பாடல்களில் இவை 104 வரிகளில் எழுதப்பட்டவை.

”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற நீதி நெறி வரியுடன் தொடங்கும் இந்த நூல் இன்னவற்றைச் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையுடன் இறுதி வரிகளில் வள்ளியையும் முருகனையும் போற்றிப் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்தச் சுவடியில் உள்ள உலக நீதிப் பாடல்கள், மிகுந்த பாட பேதங்களுடன் உள்ளன. ஏடுகள் மிகவும் சிதைந்து விட்டதால் 8 பாடல்களே கிடைத்துள்ளன. 5 பாடல்கள் கிடைக்கவில்லை. இதில் மூல உலக நீதியில் உள்ள பாடல்களில் இருந்து பல வரிகள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. அத்துடன் மூல நூலில் இல்லாத 2 புதிய பாடல்கள் இந்த ஓலைச் சுவடியில் கிடைத்துள்ளன.

இத்துடன் 'வேண்டாம்' என்பதை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட உலக நீதியில் 'வேண்டும்' என்பதை கடமையாகக் கொண்டு கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு கூலி கட்டாயம் தர வேண்டும் என்பது, அழகிய வெண்பா வடிவில் இயற்றப்பட்டு ஒரு ஏட்டில் எழுதப்பட்டுள்ளது. மூல நூலில் இல்லாத, ஆனால் சுவடியில் புதிதாக உள்ள 2 விருத்தப்பாடல்களும் இந்த வெண்பாவும் சுவடியின் உரிமையாளரான ராமக் குடும்பனால் புதிதாக இயற்றப்பட்டு, சேர்க்கப்பட்டவையா என்பதும் தெரியவில்லை.

மூல நூலில் உள்ள பாடல்களில் முருகனும் வள்ளியும் மட்டும் போற்றிப் புகழப்பட்ட நிலையில் தற்போது கிடைத்த இந்த ஓலைச்சுவடியில் தெய்வானைக் கென்று ஒரு தனிப்பாடல் இயற்றப்பட்டு சேர்க்கப்பட்டு ள்ளது. புதிய செய்தியாக உள்ளது. அத்துடன் மூல நூலில் இல்லாத ஆனால் பாடல் வடிவமற்ற 16 அறிவுரைகளும் இச்சுவடியில் இடம் பெற்றுள்ளன. சிதைந்த ஏடுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்று நாராயணமூர்த்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x