Published : 19 May 2025 11:53 AM
Last Updated : 19 May 2025 11:53 AM

சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது; பல்லடம் வழக்கிலும் தொடர்பு: மேற்கு மண்டல ஐஜி

டிஐஜி சசிமோகன், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், மற்றும் ஈரோடு எஸ்பி சுஜாதா (இடமிருந்து வலமாக)

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) - பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த மாதம் 28-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

12 தனிப்படை அமைப்பு: இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் இன்று (மே.19) காலை ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் கொலை வழக்கு தொடர்பாக பழங்குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

குற்றவாளிகள் விவரம்: இதில் அறச்சலூர் வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48) அறச்சலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (52), வீரப்பம்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ்

கடந்த மாதம் 28-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல், இரு சக்கர வாகனத்தில் மூவரும் ராமசாமியின் தோட்டத்துக்கு வந்துள்ளனர். கரும்புக்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளனர். அப்போது மின் தடை ஏற்படுத்தி, பாக்கியத்தை வீட்டில் இருந்து வெளியே வர வைத்துள்ளனர். வெளியே வந்த அவரை, மரக்கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ராமசாமியையும், மூவரும் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்: பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியுள்ளனர். திருடிய நகையை சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 2-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், கொலைக்கு பயன்படுத்திய மரக்கட்டை, கையுறை மற்றும் கொலையான ராமசாமியின் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலை நடந்த வீட்டில் இருந்த கால்தடங்களுடன், குற்றவாளிகளின் கால் தடங்களை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழைய குற்றவாளிகள் : குற்றவாளி ஆச்சியப்பன் தேங்காய் உறிக்கும் பணி மற்றும் தோட்ட வேலை செய்வது போன்று தனியாக உள்ள தோட்டங்களுக்கு சென்று நோட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கொடுக்கும் தகவலின் படி, மற்ற இருவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து நகையைத் திருடியுள்ளனர். சிவகிரி கொலை சம்பவத்துக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பு இப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர். குற்றவாளிகள் மூவரின் மீதும், 2015-ம் ஆண்டு 5 வழக்குகள் இருந்துள்ளன. இந்த வழக்கில் இருந்து இவர்கள் விடுபட்டுள்ளனர்.

பல்லடம் கொலை: திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையாடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கிலும் தற்போது பிடிபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் தொடர்புள்ளது.

ரோந்து பணி தீவிரம்: இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவதால், நீதிமன்றம் மூலம் இவர்களை காவலில் எடுத்து அந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் நடந்த குற்றச் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை.

இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர பகல் மற்றும் இரவு ரோந்துகள், 35 இருசக்கர வாகன ரோந்து, 3 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கியது எப்படி? கொலையாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியாக இருந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் இருந்து இரவில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதைக் கண்டறிந்த போலீஸார், அந்த வாகனம் எதுவரை சென்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பழங்குற்றவாளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, கொலை குற்றவாளிகள் சிக்கியதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலையின் ‘கெடு’ - சிவகிரி அருகே நடந்த இந்த கொலை சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிவகிரியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசும்போது, வரும் 20-ம் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், சிவகிரியில் தனது தலைமையில் தொடர் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவித்தார். அவர் கொடுத்த கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக (19-ம் தேதி) குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x