2 வீடுகளுக்கு இடையே சிக்கிய மூதாட்டி: 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்பு

2 வீடுகளுக்கு இடையே சிக்கிய மூதாட்டி: 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்பு
Updated on
1 min read

சென்னை: இரண்டு வீடுகளுக்கு இடையே சிக்கிய மூதாட்டியை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். சென்னை மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி (60). இவர் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இவரது உறவினர்கள் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டதால், பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டிருந்த வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மாப், இவரது வீட்டுக்கும், அருகில் உள்ள வீட்டுக்கும் இடையில் உள்ள அரை அடி சந்தில் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார்.

அதை எடுக்க பல வழிகளில் முயற்சித்த அவர், கடைசியில் அரை அடி சந்தில் நுழைந்து எடுக்க சென்றார். அப்போது, மாப்பை எடுத்த மூதாட்டியால் திரும்பி வெளியே வர முடியவில்லை. இருவீடுகளுக்கு இடையே உள்ள அரை அடி சந்தில் சிக்கிக்கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மணலி போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து 3 மணி நேரம் போராடி பொம்மியை பத்திரமாக மீட்டனர். இதில் இவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in