10,000 புத்தகங்களுடன் ரூ.1.85 கோடியில் சென்ட்ரல் மெட்ரோவில் விரைவில் மாபெரும் புத்தக பூங்கா!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்படும் இந்த புத்தக பூங்கா, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிக மக்கள் வந்துசெல்லும் இடங்களில் முக்கியமானது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம். தவிர, இங்கு போதிய இடவசதியும் உள்ளது. எனவே, ரயிலில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும்.

அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடற்செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், பன்னாட்டு பொருளாதாரம், வணிகவியல், தமிழக, இந்திய, உலக வரலாறு, இங்கிலாந்து - ஐரோப்பிய வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள், கதை, கவிதை என பல்வகை நூல்கள் இடம்பெறும். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமின்றி, மொழிபெயர்க்கப்பட்ட உலக மொழி புத்தகங்களும் இருக்கும்.

அனைத்து புத்தகங்களையும் இங்கு ஒரே இடத்தில் வாங்கலாம். இதனால், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இங்கு விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. சிறப்பு நிகழ்வுகளில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். நூலகம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

சிறிய அளவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக 80 பேர் அமரக்கூடிய அரங்கம், சிற்றுண்டியகம், வைஃபை ஆகிய வசதிகள் உள்ளன. மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் ஏ.சி. வசதி உள்ளது. கண்காணிப்பு கேமரா, போதிய மின்வசதி, கழிப்பிட வசதி ஆகியவையும் உள்ளன. இதனால், இங்கு வரும் வாசகர்கள், பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு ஓர் இனிய அனுபவத்தை தரும். இந்த புத்தக பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in