Published : 17 May 2025 09:32 PM
Last Updated : 17 May 2025 09:32 PM
கிருஷ்ணகிரி: பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என பர்கூரில் அதிமுக எம்பி தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாழ்வில் பல முன்னேற்றங்களை பெற கல்வி அவசியமாக இருக்கிறது. ஒரு பேராசிரியராக இருந்த எனக்கு, கல்வியால் தான் துணை சபாநாயகர், மத்திய, மாநில அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள், பதவிகள் கிடைத்தது.
கல்வியும், மருத்துவமும் இன்றைய சூழலில் அவ்வளவு முக்கியமானதாக உள்ளது. இவற்றை வளர்ப்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன். இன்றைய காலகட்டங்களில் பெண்கள் கல்வியில் அதிகளவில் முன்னேறி வருகின்றனர். அகில இந்திய அளவில் பெண்கள் சாதிக்கின்றனர். அவர்களை பாராட்ட வேண்டும்.
தற்போது, ‘ஏஐ’ தொழில்நுட்ப கல்வி, ‘டேட்டா இன்பர்மேஷன்’ உள்ளிட்ட கல்விகள் பெரியளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதிலும், இந்திய மாணவர்கள் சாதித்து வருகின்றனர். மத்திய அரசு பாடத்திட்டத்தில், சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டாலும், அதற்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசு. 252 பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, தும்பை விட்டு வாலை பிடிப்பது போல தமிழக அரசு செயல்பட கூடாது. அவர்களுக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை தரம் உயர்த்த வேண்டும்.
மேலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாக சொல்கிறார்கள். பள்ளி கட்டிடம் சரியாக இருப்பதால் மட்டும் கல்வி வளராது. மாணவர்களுக்கு மதிய உணவு, மடிக்கணினி வழங்கிய திட்டங்கள் போல், புதிய திட்டங்களை வழங்க வேண்டும்.
தொழில்நுட்பங்கள் வளர வளர அதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். ஆனால் இன்று ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றினால்தான், கல்வியின் தரமும் உயரும்.
வாணிஒட்டில் புதிய அணை கட்டினால் நமது மாவட்டத்தின் பல பகுதிகள் வளம்பெறும். அதன் மூலம், வறட்சியாக காணப்படும் பர்கூர் பகுதியை, காவேரிப்பட்டணம் பகுதி போல பசுமையாக மாற்ற முடியும். இந்த திட்டத்தை என் வாழ்நாளில் எப்படி சாதிக்க முடியும், என்பதை அரசியல் மூலமாக முயற்சி செய்து வருகிறேன், அது வெற்றி பெறும். அதன் மூலம் தண்ணீர் பஞ்சம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் கேஆர்சி தங்கமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT