மீண்டும் உயிர்பெறும் திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டம்!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்ட ஆய்வுக்காக ரயில்வே நிர்வாகம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளப் பகுதியில் புலிகள் சரணாலயம், முல்லை பெரியாறு அணை, அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் 2 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்று பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் இருந்து வருகிறது. சபரிமலை பக்தர்கள் மட்டுமல்லாது, இடுக்கி மாவட்ட வர்த்தகர்கள், இருமாநில சுற்றுலா பயணிகளும் இத்திட்டம் மூலம் அதிகளவில் பயன்பெறுவர். இதனால் இத்திட்டம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை போராட்டக் குழு உருவகாக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல்-லோயர்கேம்ப் வரை தரைப்பகுதியிலும், பின்பு லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி மலைப்பாதை வண்டிப்பெரியாறு வழியே அடுத்தகட்டமாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக 2012-ம் ஆண்டு லோயர்கேம்ப் வரை ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடு ரூ.650 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2016-ல் இத்திட்டம் திண்டுக்கல்-சபரிமலை என்று திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், லோயர்கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையை கடந்து செல்கையில், முல்லை பெரியாறு அணை, வனவிலங்கு சரணாலயம், அடர்ந்த காடுகள் போன்றவை இருப்பதுதான். இதனைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்த முடியாத திட்டங்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டது.

திண்டுக்கல் - சபரிமலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் அறிக்கையில், திண்டுக்கல் முதல் சபரிமலை வரை புதிய ரயில் பாதை சர்வே பணிக்காக மொத்தம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும்போது சபரிமலைக்கு நேரடி ரயில் வசதி கிடைப்பதுடன், திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட இதுவரை ரயில் பாதையே இல்லாத பகுதிகளுக்கு புதிய ரயில் வசதி உருவாகும் நிலை உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், ‘சர்வே பணிக்காக நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம். முதற்கட்டமாக திண்டுக்கல் முதல் லோயர்கேம்ப் வரையிலும், பின்னர் சபரிமலைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் உடனடியாக மக்கள் பயனடைவர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in