முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலை. பேராசிரியர் பணியிடை நீக்கமா? - ராமதாஸ் கேள்வி

முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலை. பேராசிரியர் பணியிடை நீக்கமா? - ராமதாஸ் கேள்வி
Updated on
1 min read

சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயலும், அதை திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானபோது, துணைவேந்தராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலமே இருக்கும் போது, புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பதிவாளர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியான நிலையில் அதைக் காரணம் காட்டி வைத்தியநாதனை பதிவாளர் மூலம் பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் ஆணையிட்டுள்ளார். இது தவறானது. துணைவேந்தருக்கு எதிரான இரு வழக்குகளின் விசாரணையில் வைத்தியநாதன் முதன்மை சாட்சியாக இருப்பதால் அவரை பழிவாங்கும் நோக்குடனும், மிரட்டும் நோக்குடனும் இந்த நடவடிக்கையை துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார். இது துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிரானது.

துணைவேந்தர் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இத்தகைய பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை அரசு அனுமதிக்கக்கூடாது; இதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது. இதற்கெல்லாம் மேலாக, துணைவேந்தர் பொறுப்பிலிருந்து தாம் ஓய்வு பெற்றாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கு ஆதரவாக உள்ள சில பேராசிரியர்களை நிர்வாகக் குழுவில் நியமிக்கவும் துணைவேந்தர் திட்டமிடுவதாக தெரிகிறது.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊழல் செய்தவர் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும் அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் அமைதியாக இருக்காமல், உதவி பேராசிரியர் வைத்தியநாதனின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்; அத்துடன் துணைவேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in