சர்ச்சைக்குரிய பாடல் நீக்கப்பட்டதாக தகவல்: சந்தானம் படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

சர்ச்சைக்குரிய பாடல் நீக்கப்பட்டதாக தகவல்: சந்தானம் படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

Published on

சென்னை: நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய 'கோவிந்தா... கோவிந்தா...' பாடல் நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...' பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், குறிப்பிட்ட பாடலில் ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டதாகவும், பாடல் டியூன் ‘மியூட்’ செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதையும், டியூன் ‘மியூட்’ செய்யப்பட்டதையும் சரிபார்த்து தெரிவிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நேற்றைக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், காலையில் படத்தை பார்த்தபோது முழு பாடலும் நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in