Published : 16 May 2025 08:21 PM
Last Updated : 16 May 2025 08:21 PM

“நான் நிம்மதியாக இருக்கிறேன்... ‘கூண்டுக்கிளி’ ஆக விரும்பவில்லை!” - அண்ணாமலை மனம் திறப்பு

திருவண்ணாமலை: “தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். ஊட்டியில் வெயில் குறைவாக இருந்தால் ஏதாவது பேசத்தோன்றும். அடுத்து சென்னை வெயிலுக்கு வந்தால் முதல்வருக்குத் தெளிந்து விடும். ஊட்டியில் இருப்பதால் அவர் தெளியாமல் இருக்கிறார்.

மோடியின் இதயத்தில் ஓபிஎஸ்ஸுக்கு தனி இடம் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அனைவரும் பாஜகவோடுதான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. பாஜக கூட்டணி வலுவாகத்தான் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. 2026-ல் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாகத் தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள் என தமிழக முதல்வருக்குத் தெரியும்.

புத்தகங்கள் படிப்பதற்கும் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரம் கிடைத்துள்ளது. தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென்று நினைக்கிறேன். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓய்வு பெறும் சில நாட்களுக்கு முன்பு கைது நடவடிக்கை வரை சென்றனர்.

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன். எனக்கு பவரெல்லாம் தேவையில்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

நான் கூறிய கூண்டுக்கிளி விவகாரத்தை விவாதமாக்க வேண்டாம். நான் எனக்காகப் பேசுகிறேன். நீங்கள் உங்களுக்காகக் கேட்கிறீர்கள். நான் கூண்டுக்கிளி என்று சொன்னதை மற்ற அமைச்சர்களுடன் ஏன்? ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறீர்கள். நான் தற்போது தந்தையாகவும் மகனாகவும் இருக்க விரும்புகிறேன். என்னை ஏன் அடைத்து வைக்கப் பார்க்கிறீர்கள் என்றுதான் தெரிவித்தேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x