Published : 16 May 2025 06:44 PM
Last Updated : 16 May 2025 06:44 PM
திருநெல்வேலி: “தமிழகத்தின் நிதிநிலை குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே, காலம் கனியும்போது மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்” என்று மின்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நேற்று மாலையில் சூறை காற்றுடன் பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. திருநெல்வேலி தச்சநல்லூரில் மின்தடையால் எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று (மே 16) ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “எதிர்பாராத வகையில் சூறை காற்றுடன் கோடை மழை பெய்யும்போது பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலியில் பெய்த கோடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் செய்யப்பட்டுவிடும். மின் வாரியத்தில் போதுமான பணியாளர்களை நியமிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தச்சநல்லூர் தகனமேடையில் ஜெனரேட்டர் பழுது பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. தற்போது மழையும் பெய்துவருவதால் மின் பற்றாக்குறை பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. மேலும் காற்றாலை மின்சாரமும் விரைவில் கிடைக்கும் என்பதால் பிரச்சினைகள் எழாது. தேவைப்பட்டால் வெளியில் இருந்து மின்சாரம் வாங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல இடங்களில் மின்வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் மின்விபத்து சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம்.
சில இடங்களில் பயனர்களுடைய அஜாக்கிரதை காரணமாகவும் விபத்துகள் நேரிடுகின்றன. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை போன்ற மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே மின்னகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் நிதிநிலை குறித்து எல்லோருக்கும் தெரியும். நிதி நெருக்கடி பிரச்சினைகள் இருந்தாலும் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். காலம் கனியும்போது மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார். அப்போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT