Published : 16 May 2025 05:55 AM
Last Updated : 16 May 2025 05:55 AM
சென்னை: இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் எனும் இனிப்பை வாங்கியுள்ளார்.
ஒரு கிலோ ரூ.1700 என்ற அடிப்படையில் ரூ.425 விலை வசூலிப்பதற்கு பதில் ரூ.450 வசூலித்துள்ளனர். இதை அறிந்த ரவிசங்கர், கடையிலிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்பட்டு விட்டதாக கூறிய பணியாளர்கள் ரூ.25 திருப்பி அளித்துள்ளனர்.
ஆனால், 30 நிமிட வாதத்துக்கு பிறகே ரூ.25 திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரவிசங்கர் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
புகார் மனுவை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ``கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி அளித்து இருந்தாலும் கூட இனிப்பகத்தின் செயல்பாடு சேவை குறைபாட்டைக் காட்டுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஆற்றுப்படுத்தும் வகையில் 15 நாட்களுக்குள் ஒரு கிலோ பாதாம் பிஸ்தா ரோல் இனிப்பை அவரது வீட்டுக்கே சென்று வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT