Published : 16 May 2025 05:12 AM
Last Updated : 16 May 2025 05:12 AM
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்தரி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 127-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்ளிட்ட 275 வகையான, 7.5 லட்சம் மலர்ச் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலர் மாடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 45 ஆயிரம் மலர்த் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக சோழர்களின் பெருமையை விளக்கும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை உருவம் 2 லட்சம் கார்னேசன் மற்றும் ரோஜா, கிரைசாந்தம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை உருவம் 65 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களால் பட்டத்து யானை, அன்னப்பறவை படகு உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர்க் கண்காட்சி இம்முறை 11 நாட்கள் நடப்பதால், பூந்தொட்டிகள் மற்றும் மலர்ச் செடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், அரசு கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி மாளிகையை முதல்வர் திறந்துவைத்து, கோத்தர், தோடர் பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, வேளாண் துறைச் செயலர் வ.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி. என்.எஸ்.நிஷா, ஊட்டி எம்எல்ஏ ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடக்க விழாவுக்குப் பின்னர், மலர்களால் செய்யப்பட்ட அரண்மனை, கல்லணை உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
வாக்கு சேகரித்த முதல்வர்... மலர்க் கண்காட்சியை மனைவி துர்கா உடன் பார்வையிட்ட முதல்வர், ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அரியணையில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது, ‘உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க’ என்று பூங்காவில் இருந்தவர்களிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார். மலர் அரியணையில் அமர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT