உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கோரியது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கோரியது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதன்மூலமாக, பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை.

மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள் கொள்வதில் இறுதி தீர்ப்பளிக்கும் உரிமை கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கும் நேரடியாக சவால் விடுகிறது.

ஆளுநர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்? சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பாஜக சட்டபூர்வமாக்க முயல்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளை மத்திய அரசு முடக்க எண்ணுகிறதா?

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய பாஜக அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கு இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன்.

நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in