Published : 15 May 2025 09:06 PM
Last Updated : 15 May 2025 09:06 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி - கிழக்கு பாண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன.
விழுப்புரம் நகரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ராகவன்பேட்டை வரை நேருஜி வீதி மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் முத்தாம்பாளையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு முதல் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதில் குறிப்பாக, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து காமராஜர் வீதி சந்திப்பு வரையிலான மேல வீதியில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஏற்கெனவே இச்சாலை குறுகலானது என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை மூலமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஒலிப்பெருக்கி மூலமாக மீண்டும் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் கவுதம், ராதிகா தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை இன்று காலை தொடங்கினர். இதற்காக 8 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 8 லாரிகள் பயன்படுத்தப்பட்டன. இதையறிந்த வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு: நேருஜி சாலையில் ஆக்கிரமிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மற்றும் விழுப்புரம் நகராட்சி மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT