Published : 22 Jul 2018 10:09 AM
Last Updated : 22 Jul 2018 10:09 AM

மனிதனை பக்குவப்படுத்துவதே சமயங்களின் நோக்கம்: ஜெயின் சமூக விழாவில் முதலமைச்சர் கே.பழனிசாமி கருத்து

சமயங்கள் மனிதனை பக்குவப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

ஜெயின் சமூகத்தின் ஸ்வேதாம் பர் தேராபந்த் கிளைப் பிரிவின் 11-வது தலைமை அடிகளான ஆச்சார்யர் மஹாஸ்ரமண் தனது 4 மாத சாதுர்மாஸ விரதத்தைக் கடைபிடிக்க தற்போது தமிழகம் வந்துள்ளார். அவரது விரதத்தின் தொடக்க விழா ஆச்சார்யர் மஹாஸ் ரமண் சதுர்மாஸ் பிரவாஸ் விவஸ்தா சமிதி சார்பில் சென்னை, மாதவரத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழகம் புண்ணிய பூமி விழாவில் முதலமைச்சர் கே.பழனிசாமி சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு பேசும் போது, “இந்தியா ஒரு திருக் கோயில் என்றால் அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறை தான் தமிழ்நாடு. மாகான்களைத் தோற்றுவிக்கும் ஞானபூமியாக வும், பக்தியும் அறமும் தழைத்து விளையும் புண்ணிய பூமியாகவும் தமிழகம் உள்ளது.

இத்தகைய தமிழ் மண்ணில் நடைபயணம் மேற்கொண்டுள்ள மகாஸ்ரமண் அடிகளாரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு அரசின் சிறப்பு விருந்தினர் என்ற சிறப்பை அளித்து வரவேற்கிறோம்.

உலகில் உள்ள அனைத்து சமயமும் மனித பக்குவப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சமயங்கள் பரப்பும் கொள்கைகள் மனிதர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விளைவிக்கின்றன. மகாஸ்ரமணின் அறப்பணி தொடர்ந்து நடைபெற்று மக்களுக்கு நலம் பயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஆச்சார்யர் மஹாஸ் ரமண் பேசும்போது, “தமிழகத்தில் அன்பு, அமைதி நிறைந்து இருக்க வேண்டும்” என்று கூறி ஆசிர்வதித்தார்.

விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆச்சார்யர் மஹாஸ்ரமண் சதுர்மாஸ் பிரவாஸ் விவஸ்தா சமிதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x