

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் பல கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இதை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
கோயம்பேடு ஒருங்கிணைந்த மார்க்கெட் 295 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1996-ல் நிறுவப்பட்டது. இது பூ மார்க்கெட், பழ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் என 3 பிரிவு களாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 3194 கடைகள் இயங்கி வருகின்றன. இதை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பராமரித்து வருகிறது.
பராமரிப்பு கட்டணமாக கடை உரிமையாளர்களிடமிருந்து மாதம் தோறும் ஒரு சதுர அடிக்கு ரூ.1 வீதம் பெருநகர வளர்ச்சிக் குழுமம் வசூலிக்கிறது. மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் சதுர அடிக்கு ரூ.3 வீதம், 6 மாதங்களுக்கு ஒரு முறை சொத்து வரியும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள பல கடைகளில் இருந்து சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது.
சுமார் ரூ.7.5 கோடி சொத்து வரி நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி வருவாய் பிரிவு வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடைக்காரர்களிடமிருந்து வரியை வசூலிக்க முடியாமல் மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் திணறி வருகின்றனர். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் முகாம் அமைத்தும், ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தியும் நிலுவை வரியை வசூலிக்க முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமை யாளர் ஒருவர் கூறியதாவது:
தொடக்கத்தில் கடை உரிமை யாளர்கள் முறையாக சொத்து வரியை செலுத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த 1999-ல் சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தியது. அதன் பின்னர் பராமரிப்பு கட்டணம், சொத்து வரி என இரு வகையான கட்டணத்தை செலுத்த பல கடை உரிமையாளர்கள் மறுத்தனர். மாநகராட்சி வருவாய் அதிகாரி களும் உரிய அழுத்தம் கொடுத்து சொத்து வரியை வசூலிக்காமல் விட்டுவிட்டனர்.
பல ஆண்டுகள் வரி செலுத்தப்படாத நிலையில், ஒவ்வொரு கடை உரிமையாளரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் வரி செலுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை உடனே செலுத்த முடியாத நிலையில், பழைய வரி நிலுவை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் அல்லது 50 சதவீதம் வரையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநகர மேயர் சைதை துரைசாமியை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல் பெற மாநகராட்சி வருவாய் அலுவலர் திவாகர், மேயர் சைதை துரை சாமி ஆகியோரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.