கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து: அருகிலுள்ள வீடுகளில் பாதிப்பு; 19 பேருக்கு சிகிச்சை

கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து: அருகிலுள்ள வீடுகளில் பாதிப்பு; 19 பேருக்கு சிகிச்சை
Updated on
2 min read

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று ( மே.15) அதிகாலை சுமார் 2 மணி அளவில் சாயப்பட்டறை கம்பெனியில் உள்ள ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயன கழிவு நீர் பாய்லர் டேங்க் அதிக வெப்பத்தினால் வெடித்தது.

இதனால் அருகிலுள்ள சுமார் 20 வீடுகளில் ரசாயன கழிவுநீர் கலந்த வெப்ப தண்ணீர் ஆறு போல ஓடி புகுந்தது. இதில் கண்ணெரிச்சல், மயக்கம், வாந்தி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 19 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரசாயன கழிவு நீர் புகுந்ததில் சில வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அரசு அதிகாரிகள் யாரும் வராததால் திமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவா தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடலூர் -சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ் மற்றும் காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதான் சிப்காட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in