Published : 15 May 2025 06:14 AM
Last Updated : 15 May 2025 06:14 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன. இந்த வழித்தடத்தில் அயனாவரம், ராயப்பேட்டை உட்பட பல இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணியில் `கல்வராயன்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், நிலைய சுற்றுச்சுவர் மற்றும் நிலைய கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெரம்பூர் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கல்வராயன் இயந்திரம் பெரம்பூர் நிலையத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. அயனாவரம் - பெரம்பூர் வரை 867 மீட்டர் சுரங்கப்பாதை பணியை முடித்துள்ளது. 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இப்பணியில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அயனாவரம் - பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டிய கல்வராயன் இயந்திரம், பெரம்பூர் ரயில் நிலையம், ரயில் பாதைகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும் எதிர்கொண்டு, மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது ஆலோசகர் மற்றும் டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT