Published : 15 May 2025 06:20 AM
Last Updated : 15 May 2025 06:20 AM

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக, பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவம் தமிழ்​நாட்டு மக்​களிடையே கடும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது. தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு எதி​ராக நிகழ்ந்த மிகக்​கொடுமை​யான குற்​றசம்​பவ​மாக கருதப்​படும் இந்த வழக்கை விசா​ரணை செய்த கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் சமீபத்​தில் வழங்​கிய தீர்ப்பு பொது​மக்​களிடையே நல்ல வரவேற்​பை பெற்​றது.

இந்த கொடுஞ்​செயல்களில் ஈடு​பட்ட குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் சாகும்​வரை ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டுள்ள கடுமை​யான தண்​டனை குற்​ற செயலில் ஈடுபட முனை​வோருக்கு ஒரு கடுமை​யான எச்​சரிக்​கை​யாக இருக்​கும்.

தற்​போது தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு பாது​காப்​பான சூழலை உரு​வாக்கி பல்​வேறு வகை​களி​லும் அதி​காரம் அளிக்க தமிழ்​நாடு அரசு சிறந்த முயற்​சிகளை எடுத்​துள்​ளது. தமிழ்​நாடு அரசு செயல்​படுத்​தும் தோழி விடு​தி​கள், புது​மைப்​பெண், நான் முதல்​வன் போன்ற முன்​னோடி திட்​டங்​களின் விளை​வாக மாநிலத்​தில் பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​கள் இரண்​டிலும் மாணவி​களின் சேர்க்கை அதி​கரித்துள்​ளது. இந்​தியா முழு​வதும் உள்ள தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் பெண்​களில் 41 சதவீதம் பேர் இம்​மாநிலத்​தில் பணிபுரி​கின்​றனர்.

பொள்ளாச்சி வழக்​கில் கடந்த 13-ம் தேதி கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பில், பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு மொத்​த​மாக ரூ.85 லட்​சம் வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் பாதிக்​கப்​பட்ட பெண்​கள் தைரிய​மாக முன்​வந்து புகார் அளித்​தது மட்​டுமல்​லாமல் நீதி​மன்ற விசா​ரணைக்கு ஒத்​துழைப்​பு அளித்​ததன் அடிப்​படை​யிலேயே இந்த வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை கிடைத்​துள்​ளது. பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நியா​யம் கிடைத்​துள்​ளது. அத்​தகைய நியா​யத்​துக்காக துணிச்​சலுடன் போராடிய பெண்​களின் தைரி​யம் பாராட்​டுக்​குரியது.

அந்த வகை​யில், நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரண தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x