Published : 15 May 2025 06:30 AM
Last Updated : 15 May 2025 06:30 AM
சென்னை: தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அன்புடன் “இசைஞானி” என அழைக்கப்பட்டவர் இளையராஜா. அந்த பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதும், 4 முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், “மேஸ்ட்ரோ” என்று அனைவராலும் அழைக்கப்படுபவரும், லண்டன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவரும், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவரும், 1,500-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா கடந்த 1976-ம் ஆண்டு வெளியான “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ் சினிமா இசையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய இளையராஜாவுக்கு மே 14-ம் தேதி தமிழ் சினிமா உலகில் பொன் விழா ஆண்டு என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது. இந்நாள் இசைஞானியின் பொன்னாள். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இளையராஜாவின் ராஜ இசை என்றென்றும் இசைத்துக் கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT