Published : 15 May 2025 04:22 AM
Last Updated : 15 May 2025 04:22 AM

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகள் ஜெர்மனி செல்ல நிதியுதவி

சென்னை: ஜெர்மனியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் செலவினத்துக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி (FISU) ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் தமிழக தடகள வீராங்கனை ஏஞ்சல் சில்வியா, வீரர்கள் ஜெரோம், அஸ்வின் கிருஷ்ணன், ரீகன், கூடைப்பந்து வீரர் சங்கீத் குமார், வீராங்கனை தேஜஸ்ரீ, சுகந்தன், கையுந்து பந்து வீராங்கனை ஆனந்தி, சுஜி, கனிமொழி, வீரர் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை கனகலட்சுமி ஆகிய 12 பேருக்கு செலவின தொகையாக ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து நீச்சல் வீராங்கனை ஸ்ரீகாமினி, இறகு பந்து வீராங்கனை ஜனாக்‌ஷி, தடகள வீரர் வாசன், யுகேந்திரன், வீராங்கனைகள் ஸ்வேதா, ஸ்ரீரேஷ்மா, கேரம் வீராங்கனைகள் ஹரிணி, காவியா ஆகியோருக்கு மொத்தம் ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களையும் துணை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x