Published : 15 May 2025 05:30 AM
Last Updated : 15 May 2025 05:30 AM
சென்னை: பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம் (https://eservices.tn.gov.in) வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில் உயிரிழந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களுக்கு பதில் வாரிசுதாரர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்கள் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
இந்த திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது ‘citizen portal’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு, இறப்பு சான்று, வாரிசு சான்று, வாரிசுகளில் எவரேனும் இறந்திருந்தால் அவரது இறப்பு மற்றும் வாரிசு சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை, தான செட்டில்மென்ட் அல்லது உயில் சாசன ஆவண நகல், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் கோரப்பட்டால் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கிரையம் பெற்றவர்களாக இருந்தால், இறப்பு சான்று, வாரிசு சான்று, வாரிசுகளில் எவரேனும் இறந்திருந்தால் அவரது இறப்பு மற்றும் வாரிசு சான்று, பட்டா மாறுதல் கோரும் புலம் தொடர்பான வில்லங்க சான்று, பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவண நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, பட்டாதார்கள் பெயர் மாற்றம் தொடர்பான உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர் அவற்றை சரிபார்த்து, இணைய வழியில் மண்டல துணை வட்டாட்சியருக்கு அனுப்புவார். அவர் அந்த விண்ணப்பத்தை சரிபார்த்து நீதிமன்ற வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, ஒப்புதல் அளிப்பார். உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலை பொருத்தவரை, நில அளவர் ஆவணங்களை சரிபார்த்து, நிலத்தை அளவீடு செய்து, வட்டாட்சியர் ஒப்புதலுக்கு அனுப்புவார்.
அவர் ஆவணங்களை சரிபார்த்து, நீதிமன்ற வழக்கு இல்லை என்பதை உறுதி செய்து ஒப்புதல் அளிப்பார். பட்டா மாறுதல் தொடர்பாக இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாமதமின்றி உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT