பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை எதிர்த்து வழக்கு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை எதிர்த்து வழக்கு

Published on

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் அரசிதழ்களில் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் பிரிவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் கே.வெங்கடாச்சலபதி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் நிலுவையில் உள்ளது. அதை திரும்ப பெறாமல் புதிதாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. மேலும், இந்த சட்ட திருத்தங்களுக்கான தீர்க்கமான காரணங்கள் எதுவும் தமிழக அரசால் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அந்த அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளதா, அமைச்சரவைக்கு உள்ளதா அல்லது மாநில அரசின் நிர்வாக தலைவரான ஆளுநருக்கு உள்ளதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

தமிழக அரசின் இந்த சட்ட மசோதாக்கள், பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) விதிகளுக்கு எதிராக உள்ளன. எனவே, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான இந்த மசோதாக்கள் சட்ட விரோதமானவை என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in