“பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை” - கனிமொழி எம்.பி

“பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை” - கனிமொழி எம்.பி
Updated on
1 min read

திருநெல்வேலி: "பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அன்றைய அதிமுக அரசு நிற்கவில்லை.எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாதநிலை ஏற்பட்டதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசும்போது, “வரும் சட்டப் பேரவை தேர்தல் களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்கு கள நிலவரம் தேவைப்படுகிறது.

மாவட்ட அளவில் களத்தில் பணி செய்யக்கூடிய நிர்வாகிகளான உங்களது கருத்துகளை கேட்டு தேர்தல் பணிகளை செய்வதற்கான வியூகங்கள் வகுப்பதற்கு ஆலோசனைகள் உதவும். விருப்பு வெறுப்புகளை கடந்து காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உங்களது கருத்துகளை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் தெளிவாக எடுத்துரைத்தால் தேர்தல் களத்தை சந்திப்பது எளிதாக இருக்கும். தேர்தல் நெருங்குவதால் திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடத்தில் எடுத்து செல்லவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, "பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அன்றைய அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் முறையாக வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் நிலை ஏற்படாத காரணத்தினாலேயே மக்கள் போராட்டம் நடத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றியது பெருமை என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது வெட்கப்பட வேண்டிய விஷயம். வரும் சட்டப் பேரவை தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in