கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சுவாச அழற்சிக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கான மருத்துவ செலவுத் தொகையை இரு வாரங்களில் வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 95 வயது மூதாட்டியான கமலாம்மாள் அரசின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுவாச அழற்சி பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ஒரு லட்சத்து ஆயிரத்து 243 ரூபாயை வழங்கும்படி ஓய்வூதிய அதிகாரி மூலமாக காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பத்தை யுனைடெட் இந்தியா நிறுவனம் நிராகரித்தது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கும் ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி கமலாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், ``மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை வேண்டி குறித்த காலத்தில் விண்ணப்பித்தும், தாமதமாக விண்ணப்பித்துள்ளதாகக் கூறி நிராகரித்துள்ளனர்'' என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ``மனுதாரர் கமலாம்மாள் காப்பீடு கோரி அளித்த விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்காத ஓய்வூதிய அதிகாரியின் தவறுக்கு, மனுதாரர் பொறுப்பாக முடியாது. அவருக்கான மருத்துவ செலவுத் தொகை ஒரு லட்சத்து ஆயிரத்து 243 ரூபாயை இரு வாரங்களில் வழங்க வேண்டும்'' என யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in