மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்

Published on

சென்னை: குரூப் - 4 தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகிறது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பப்படிவ நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in