தமிழகம் முழுவதும் நாளை முதல் தேசியக்கொடி ஏந்தியபடி சிந்தூர் யாத்திரை: அனைத்து கட்சிகளுக்கும் நயினார் நாகேந்​திரன் அழைப்பு

தமிழகம் முழுவதும் நாளை முதல் தேசியக்கொடி ஏந்தியபடி சிந்தூர் யாத்திரை: அனைத்து கட்சிகளுக்கும் நயினார் நாகேந்​திரன் அழைப்பு
Updated on
1 min read

சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை நடத்தப்போவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை கொன்று, உலக அமைதிக்கு எதிராகவும் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகவும் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அந்தவகையில் வீரத்துடன், விவேகத்துடன் துல்லியமாக தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய பிரதமர் மோடியின் உறுதியான தலைமையை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக்கொடி ஏந்தியபடி 4 கட்டங்களாக யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில தலைநகரமான சென்னையில் நாளையும் (இன்று), இதர முக்கிய நகரங்களில் மே 15-ம் தேதியும் (நாளை), மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16, 17-ம் தேதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள், தாலுகா, பெரிய கிராமங்களில் மே 18, 23-ம் தேதிகளிலும் தேசிய கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்தப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் கட்சி தலைமையிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகளுக்கு வழங்கப்படும்.

நம் வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், நம் நாட்டின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் பெரிய அளவில் யாத்திரைகளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in