Published : 13 May 2025 09:55 PM
Last Updated : 13 May 2025 09:55 PM
மதுரை: மதுரை மாநராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமே 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெருநாய்களால் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நல துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சியில் தனியார் நிறுவனம், விலங்குகள் நலத்தொண்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி நகர் நலத்துறை, கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் 23 வரை தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டது.
இந்த சர்வே முடிவு அடிப்படையில் மாநகராட்சி 100 வார்டுளில் மொத்தமே 38,348 தெருநாய்கள் மட்டுமே இருப்பதாக நகநகர்நலத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரியும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நகர்நலத் துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியிருந்தும் தெருநாய்கள் எண்ணிக்கையை மாநகராட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் கணக்கெடுப்பில் தெருநாய்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் தெருநாய்கள் எண்ணிக்கை 53,826 தெருநாய்கள் இருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சர்வேயில் 47,573 தெருநாய்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திராவிடம் கேட்டபோது, “முதன்முறையாக விஞ்ஞான முறையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெருநாய்கள் 100-வது வார்டில் அதிகமாகவும், 49,80 ஆகிய வார்டுகளில் குறைந்த எண்ணிக்கைலும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட நாய்களில் 65 சதவீதம் ஆண் நாய்களும், 35 சதவீதம் பெண் நாய்களும் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த நாய்களில் 83 சதவீதம் ஆரோக்கியமாகவும், 17 சதவீதம் நாய்கள் அடிபட்டு, காயம், தோல் நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளுடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் தெருநாய்கள் கருத்தடை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்றார்.
நன்றி மறவேல் சமூக நாய்கள் நல ஆர்வலர் மாரிகுமார் பரமசிவம் கூறுகையில், “மக்களையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்காகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படியொரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவில்லை. அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எப்படி கணக்கெடுப்பு நடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை சரியானதா? என்ற குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT