‘சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் பொள்ளாச்சி வழக்கில் உரிய நீதி கிடைத்துள்ளது’ - அதிமுக

‘சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் பொள்ளாச்சி வழக்கில் உரிய நீதி கிடைத்துள்ளது’ - அதிமுக
Updated on
2 min read

சென்னை: “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது,” என்று அதிமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வமான எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் இல்லையா?

அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எஃப்ஐஆரை லீக் செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு? எஃப்ஐஆர் அடிப்படையில் யார் அந்த சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழு மூச்சாக இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே, ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது? நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு? தெளிவாக சொல்கிறோம், எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு, இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு

“ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல,அனுதாபி மட்டுமே” என்று முதல்வர் ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை. உங்களை போன்று எந்த சாரையும் காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை. திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும். 2026-ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார்? என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும், இது உறுதி.” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த கோவை மகளிர் நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in