‘ஆன்லைன் சூதாட்ட பண இழப்பு தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படுவது எப்போது?’ - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப்படம்
ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகள் எப்போது தடுத்து நிறுத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை: சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முருகனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முருகனைப் போன்றவர்களுக்கு ரூ.6 லட்சம் என்பது மிகப்பெரிய தொகையாகும். வங்கி ஊழியர் என்ற முறையில் ஈட்டிய வருவாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதன்பின்பு கடன்வாங்கியும் பெருந்தொகையை இழந்த நிலையில், வாங்கிய கடனை அடைக்கவே முடியாது எனும் சூழலில் முருகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விடுபட அவர் முயன்றாலும் அவரால் அது முடியவில்லை. அதனால்தான் ஆன்லைன் சூதாட்டத்தை ஒரு மாய ஆட்டம் என்று கூறி வருகிறேன். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

முருகனின் தற்கொலை கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த 12-வது தற்கொலையாகும். திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 89 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தங்களின் உயிரை இழந்துள்ளனர். இவ்வளவு பேர் இன்னுயிரை இழப்பதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 16 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.

இதை உணர்ந்து ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in