தமிழகத்துக்கான வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்ப்பு: அன்புமணி சாடல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்துக்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை மீட்டெடுத்து இங்கு புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்பட்ட 20 வந்தேபாரத் ரயில்வண்டிகளுக்கான பெட்டிகளில் 9 ரயில்வண்டிகளுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் வந்தேபாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய ரயில்பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது.

2022-ம் ஆண்டில் வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் 20 வந்தேபாரத் ரயில்களை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. 20 பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்கள், 16 பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்கள், 8 பெட்டிகளைக் கொண்ட 12 ரயில்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன. அவற்றில் 10 ரயில்கள் மட்டும் தான் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. மேலும் ஒரு வந்தேபாரத் ரயில் மாற்றுச் சேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 ரயில்களை இயக்குவதற்கான பெட்டிகள் கிழக்கு கடற்கரை ரயில்வே (ஒடிசா), தென்கிழக்கு ரயில்வே (கொல்கத்தா), தென்கிழக்கு மத்திய ரயில்வே (சத்தீஸ்கர்) ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தப் பெட்டிகளைக் கொண்ட வந்தேபாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 8,700 பேர் கூடுதலாக பயணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது.

தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய வந்தே பாரத் ரயில்கள் பிறமாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு தெற்கு ரயில்வேத்துறையின் அலட்சியம் தான் காரணமாகும். தமிழகத்துக்கு 20 வந்தேபாரத் ரயில்களை இயக்கத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்தி எந்தெந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்கலாம் என்ற திட்டத்தை தெற்கு ரயில்வேத்துறை வகுத்திருக்க வேண்டும்.

அதை செய்யாமல் 9 ரயில்களை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகளை தெற்கு ரயில்வேத்துறை பயன்படுத்தாமல் வைத்திருந்ததால் தான் அவை வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ரயில்வேத்துறை அதிகாரிகளே கூறுகின்றனர்.

தமிழகத்தில் சென்னையிலிருந்து பெங்களூர், தூத்துக்குடி, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓராண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கு வசதியாக பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வந்தேபாரத் ரயில் பெட்டிகளையோ அல்லது அவற்றுக்கு மாற்றாக புதிய ரயில் பெட்டிகளையோ கேட்டுப்பெற்று தமிழகத்தில் தேவையான வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in