நில அபகரிப்பு முயற்சி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்​.ஆர்​.​விஜயபாஸ்கருக்கு சம்மன்

நில அபகரிப்பு முயற்சி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்​.ஆர்​.​விஜயபாஸ்கருக்கு சம்மன்
Updated on
1 min read

சென்னை: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 23-ம் தேதி நடைபெறும் காணொலி விசாரணையில் ஆஜராகும்படி, வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டு இவரை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பினாமி பெயரில் இந்த சொத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்க முயன்றாரா என்பது குறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, நிலத்தின் உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் சார்பில் ஒருவர் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ், வரும் 23-ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வழக்கறிஞர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்கு பிறகே வழக்கின் நிலை குறித்து விரிவாக கூற இயலும் என வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in