ஜம்மு காஷ்மீரில் பயிலும் 52 தமிழக மாணவர்களின் நிலை என்ன? - மாநில அரசு விளக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.22-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சார்ந்த 52 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

இந்த வேண்டுகோளுக்கு இனங்க, முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவர்களை சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு புறப்பட்ட கல்விச் சுற்றுலா மாணவர்கள்: கல்வி சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (மே 9) இரவு 7.30 மணியளவில் புது டெல்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள். பின்னர் மே 10ம் தேதி அன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவர்.

இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24/7 உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்களிலும், மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசின் 24/7 உதவி எண்களான, 1800 309 3793 (இந்தியாவிற்குள் ), +91 80 6900 9900 (வெளிநாடு), + 91 80 6900 9901 (தொடர்புக்கு) தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in