Published : 09 May 2025 06:14 AM
Last Updated : 09 May 2025 06:14 AM
சென்னை: சென்னையில் 2-வது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் விமான நிலையம், மணலி மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.
காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்தது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் 259 இடங்களில் போர் ஒத்திகை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன.
இதில் போர் நடைபெறும் காலத்தில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, போரில் காயப்படும் வீரர்களை எவ்வாறு மீட்பது, அவசர நிலையில் என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கட்டிடங்களில் சிக்கி இருக்கும் மக்களை எவ்வாறு மீட்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டனர்.
அந்தவகையில் சென்னையில் துறைமுகத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்திலும் இந்த போர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து 2-வது நாளாக சென்னை விமான நிலையம் மற்றும் மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய பகுதியில் போர்கால ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலின்போது பயணிகளை எவ்வாறு மீட்பது? தாக்குதலின்போது அவசர நிலையில் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்துவது, அபாய ஒலி எழுப்புவது, முதலுதவி செய்வது, பயணிகள் தங்களை தாங்களாகவே எவ்வாறு பாதுகாத்து கொள்வது? உள்ளிட்டவை குறித்து தன்னார்வலர்களை வைத்து ஒத்திகையில் அதிகாரிகள் தத்ரூபமாக செய்து காட்டினர்.
அதேபோல் மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலும் எதிரிகளின் தாக்குதல் மற்றும் அவசரகால சூழலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது ஒத்திகையை ஒருங்கிணைக்கும் மாவட்ட அதிகாரிகள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT