தமிழக அமைச்சரவையில் துரைமுருகன், ரகுபதியின் இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் துரைமுருகன், ரகுபதியின் இலாகா மாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன. துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத் துறை, ரகுபதிக்கும், அவரிடம் இருந்த சட்டத் துறை, துரைமுருகனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி 6-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கரிடமும், மதுவிலக்குத் துறை, முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன. பொன்முடி கவனித்து வந்த வனத் துறை, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், 2 அமைச்சர்களின் துறைகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரைப்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த சுரங்கங்கள், கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞரான துரைமுருகன் ஏற்கெனவே திமுக ஆட்சியில் 2009-2011 காலகட்டத்தில் சட்டத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதி: அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு 86 வயது ஆகிறது. வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நேற்று அவருக்கு சளி பிரச்சினை அதிகரித்ததால், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in