சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன், சரத்குமார் நன்றி

சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன், சரத்குமார் நன்றி

Published on

சென்னை: சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. சரத்குமார் ஆகியோர் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நயினார் நாகேந்திரன்: இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் சாலை விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும் எனும் முக்கிய முடிவை அறிவித்து, அதை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ள மத்திய அரசுக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்து உயிர் காக்கும் முக்கிய அறிவிப்பாகும்.

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதமே முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்திய இத்திட்டத்தை, தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கும் எனது நன்றி. இத்திட்டத்தின் மூலம், மக்கள் நலனை என்றும் முதன்மைப்படுத்துவது பாஜக தலைமையிலான மத்திய அரசு என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி சரத்குமார்: விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால், முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்காகப் போராடுபவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். தமிழக மக்கள் சார்பாக மத்திய அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in