Published : 08 May 2025 06:04 AM
Last Updated : 08 May 2025 06:04 AM

திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை: திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது.

இதையொட்டி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன, கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வருக்கு, அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பிக்கள் தயாநிதிமாறன், ஆ.ராசா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா மற்றும் 4 ஆண்டு சாதனை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் 390 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

அரசு சார்பில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும், தடம் எண் 32பி என்ற பேருந்தில் பயணித்தார். உடன் பயணித்த மகளிருடனும் கலந்துரையாடினார்.

திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழக முதல்வரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: 'குடிஅரசு' ஏடு சார்பில் திமுக ஆட்சியின் சாதனைகளை உலகறிய பறைசாற்றும் நோக்கத்தில், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ!” என்ற சிறு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இச்சாதனை சரித்தரம், தங்கள் ஆட்சி திராவிடத்தின் மீட்சி என்பதால், இதையே, தங்களுக்கு கருத்து மாலையாக காணிக்கையாக்கி மகிழ்கிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x