பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கினார்

பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு: அமைச்சர் கோவி.செழியன் தொடங்கினார்
Updated on
1 min read

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கிவைத்தார்.

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை, பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துறை செயலர் சி.சமயமூர்த்தி, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பணிகள் தொடர்பான காலஅட்டவணையையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6-ம் தேதி ஆகும். அசல் சான்றிதழ்களை ஜூன் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 10 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும். தரவரிசை பட்டியல் ஜூன் 27-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடியாக 2-ம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதிநேர டிப்ளமா படிப்பிலும் சேர https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக மே 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in