Last Updated : 27 Jul, 2018 12:30 PM

 

Published : 27 Jul 2018 12:30 PM
Last Updated : 27 Jul 2018 12:30 PM

ஓபிஎஸ்ஸூடன் எனக்கு பிரச்சினை ஏதும் இல்லை; இணைந்து செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் பழனிசாமி

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸூக்கும், எனக்கும் இடையே பிரச்சினை ஏதும் இல்லை, இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

கர்நாடக முதல்வருக்கு நல்ல புத்தியை ஏழுமலையான் கொடுக்க வேண்டும். நான் கோயில் சென்று ஏழுமலையானை வேண்டி வந்தேன், அதன்படி மழைபெய்து மேட்டூர் அணை இறைவனின் அருளால், நிறம்பியுள்ளது. உபரி நீரை தற்போது வந்த நீருடன் சேர்க்க முடியாது.

உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு வழங்கியுள்ளது. அதன்படி, ஆணையம் மூலம் மாதமாதம் தண்ணீர் கிடைக்கும். உபரிநீர் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. லாரி வேலை நிறுத்தத்தால் உரம் கொண்டு செல்வதில் பாதிப்பில்லை. உரம் தேவையான அளவில் தமிழகம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 3 டிஎம்சி தண்ணீர் தர மறுத்த கர்நாடக அரசு, மழையால் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டது.

துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நேரில் சென்று பார்த்து வந்தனர். எனக்கும் துணை முதல்வருக்கும் இடையே பிரச்சினை இல்லை. நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். விரைவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

பசுமை வழிச்சாலை திட்டம் சிறந்த திட்டம். இந்த திட்டம் சேலத்துக்கு அப்பால் மதுரை, திண்டுக்கல், ஈரோடு கேரளா வரை அமைக்கப்படும். எதிர்கால போக்குவரத்து நன்மைக்காக இந்த சாலை அவசியம். தொழில்நுட்பத்துடன் கூடிய சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேட்டூரில் இருந்து நாகை வரை சமவெளி பரப்பாக இருப்பதால் அந்த பாதையில் அணை கட்டமுடிய வில்லை. அணைகள் கட்ட வாய்ப்புள்ள பகுதிகளை ஆராய்ந்து அணைகள் கட்டப்படும்.

அமைச்சர் உதயகுமார் தலைமையில் அரசு திட்டங்களையும், கட்சி பணிகளையும் பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கிறோம். மாவட்ட சாலைகள், மாநில சாலைகள் என 40 சாலைகள் விரிவுபடுத்தபடும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 10 மாதம் இருப்பதால் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x