குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி உணவு பாதுகாப்புத் துறை அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தையொட்டி குடிநீர் கேன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், விதிகளின்படி, சூரிய ஒளி முன்னிலையில் குடிநீரை தேக்கி வைக்க கூடாது. கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிக்க வேண்டும்.

குடிநீரில் டிடிஎஸ் குறையும் பட்சத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே குடிநீர் சுத்திகரிப்பில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அதன்படி குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

குடிநீர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை வெளிப்படையாக அச்சிட வேண்டும். தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை கடைகளில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in