எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எப்போதும் கைகோக்க மாட்டோம்: திருமாவளவன் உறுதி

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எப்போதும் கைகோக்க மாட்டோம்: திருமாவளவன் உறுதி
Updated on
1 min read

சென்னை: ‘எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எந்த சூழலிலும் கைகோர்க்க மாட்டோம்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக வணிகர் அணியின் சார்பில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்தச் சூழலிலும் விசிக சமரசம் செய்துகொள்ளாது.

எத்தனை நெருக்கடிகள் தந்தாலும் அந்த நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் விசிகவுக்கு உண்டு. பதவி ஆசை காட்டி வீழ்த்த நினைத்தாலும், அச்சுறுத்தி வீழ்த்த நினைத்தாலும் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்.

அப்படி சமரசம் செய்து 10 இடங்களில் வெற்றிபெற்று என்ன செய்வது? எதுவும் வேண்டாம் என்றுகூட இருப்போமே தவிர, பாஜக போன்ற மதவாத சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு, 10 பேரை உள்ளே அனுப்புவதற்கு, நான் கட்சியை நடத்தவே தேவையில்லை. அந்த அவசியம் எனக்கு கிடையாது. இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை திருமாவளவன் ஒருபோதும் எடுக்கமாட்டான்.

ஒருகாலத்தில் அவர்களுடன் கைகோர்த்தோம். களமாடினோம். ஆனால் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக என்னை மட்டும் தனிமைப்படுத்தி, பட்டியலினம் அல்லாத சமூகங்களுக்கு என்னை எதிரியாகக் காட்டி, என் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு போனவர்கள் அவர்கள். அதையெல்லாம் மறந்துவிட முடியுமா? இவ்வாறு சமரசம் செய்துகொண்டு கூட்டணி வைக்கவேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியல் தேவையே இல்லை.

நான் நினைத்தால் தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் இடம் பேசி வைக்கலாம். பாஜகவில் இருந்து மிக உயர்ந்த அதிகாரியே என்னை அழைத்து பேசினார். நான் கையெடுத்து கும்பிட்டுவிட்டு, உங்கள் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி என தெரிவித்து வந்துவிட்டேன். நான் கொஞ்சம் மனம் மாறினால் என் கட்சியின் நிலையே வேறு. ஆனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மட்டும்தான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in