Published : 07 May 2025 04:31 AM
Last Updated : 07 May 2025 04:31 AM
சென்னை: ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் 32-வது ஆண்டு தொடக்க விழா, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவதால்தான் மதிமுக இத்தனை ஆண்டுகள் வளர்ந்திருக்கிறது. ஒன்றியம், நகரங்களில் கட்சி கட்டமைப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்து மதிமுகவுக்கு கிராமங்களில் 10 தொண்டர்களாவது இருக்கின்றனர்.
62 ஆண்டுகள் பொது வாழ்கையில் பயணித்து வருகிறேன். தமிழ், தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். பேச்சும், எழுத்து திறனும் இருக்கும் வரை மக்கள் பணி செய்யத் தயாராக இருக்கிறேன். கூட்டணிக்காக எந்த சமரசமும் கிடையாது.
பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் நடக்க வேண்டும் என்கின்றனர். தீவிரவாதிகளை விரட்டி, ஒடுக்க வேண்டும் என்பதை ஆதரக்கிறேன். ஆனால் யுத்தம் ஒன்று நடந்தால் அதில் எத்தனை குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவர். தீவிரவாதத்துக்கு சற்றும் தொடர்பில்லாத பாகிஸ்தானிய மக்கள் கொல்லப்படுவர். அதேபோல் இந்திய மக்களும் கொல்லப்படுவர்.
அப்படியொரு யுத்தத்தை நடத்த இந்திய அரசு முனைகிறதா? கொரியா யுத்தத்துக்குப் பிறகு உலகளாவிய யுத்தம் வந்துவிடக் கூடாது என உலக நாடுகள் அக்கறையுடன் இருக்கும்போது, இவர்கள் போர் வேண்டும் என்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தீவிரவாதிகளை தேடிப்பிடித்து ஒழித்து கட்டினால் சபாஷ் சொல்வேன். ஆனால் அப்பாவி இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள். எனவே யுத்தம் வரக்கூடாது. வந்தால் இரு நாடுகளும் அழிந்துபோகும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.ராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்கவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி முடிவடைந்தபின், துரை வைகோ கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்பொது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எனக்கு உடல்நிலை சரியில்லை. வெளியூரில் இருந்து இப்போதுதான் வந்தேன். அதனால் ஆண்டுவிழாவில் பங்கேற்க இயலவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT