Published : 06 May 2025 08:26 PM
Last Updated : 06 May 2025 08:26 PM

வடகாடு சம்பவம்: புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை சொல்வது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் எரிக்கப்பட்ட குடிசை | படம்: பிடிஐ

புதுக்கோட்டை: வடகாடு தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்ட விளக்கத்தில், ‘புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பெட்ரோல் பங்க்கில், நேற்று இரவு பெட்ரோல் போட வந்த இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. யார் முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் தொடங்கிய இந்த மோதலில், ஒரு கூரை வீடு தீயிடப்பட்டு, அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை, சமூக ஊடகங்களில் இரு சமூகத்துக்கு இடையேயான மோதலாக சித்தரித்து பரப்பப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தியைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நேற்று (மே 5) நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் போது வழிபாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள் ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து பட்டியலின மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டு கொளுத்தியும், அங்கிருந்த இரண்டு கார்களையும், இரண்டு இரு சக்கர வாகனங்களை எரித்தும், ஒரு இருசக்கர வாகனத்தை அடித்து முற்றிலுமாக நொறுக்கியுள்ளனர்.

பலத்த வெட்டுக்காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆதிக்க சாதி வெறியர்களின் இந்த கொடூரமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகாடு பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும். இத்தாக்குதல்களுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன் சொல்வது என்ன? - விசிக தலைவர் திருமாவளவன், “வடகாடு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமயத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பட்டியலின மக்களின் பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான வீடுகளையும் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி நுணுக்கமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மாற்று சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தம் என கூறி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பட்டியலின மக்கள் நீதிமன்றத்துக்குச் சென்று கோயில் அவர்களுக்கே உரியது என தீர்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில் திருவிழாவின்போது தேரை இழுக்க வந்த பட்டியலின மக்களை கடுமையாக தாக்கியது கண்டனத்துக்குரியது. இதில் காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x