அனைத்து அனுமதிகளையும் பெற்றே ஈஷா தகன மேடை அமைப்பு - உயர் நீதிமன்றத்தில் ஆட்சியர் பதில் மனு

அனைத்து அனுமதிகளையும் பெற்றே ஈஷா தகன மேடை அமைப்பு - உயர் நீதிமன்றத்தில் ஆட்சியர் பதில் மனு
Updated on
1 min read

கோவை: ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈஷாவை சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடையை ஈஷா அறக்கட்டளை கட்டியது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட தகன மேடையை செயல்படாமல் முடக்கும் நோக்கில், முறையாக அனுமதி பெறாமல் தகன மேடை கட்டப்பட்டு உள்ளது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நிறுவுவதற்கான ஒப்புதல்’ உட்பட அனைத்து அனுமதிகளைப் பெற்றும், தேவையான விதிமுறைகளையும் பின்பற்றியும், ஈஷா அறக்கட்டளை எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது. மேலும், தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர் தகன மேடைக்கு அருகிலுள்ள நில உரிமையாளராக இருந்தாலும், அவரின் வீட்டுக்குத் தேவையான கட்டுமான அனுமதியை பெறவில்லை. அதற்கான வீட்டு வரியையும் செலுத்தவில்லை” என்று அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஈஷா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 15 மயானங்களை பராமரித்து செயல்படுத்தி வருகிறது. இந்தச் செயல்களை முடக்க முயலும் சில குழுக்கள் தவறான நோக்கங்களோடு செயல்படுகின்றன. மக்கள் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை மேற்கொள்ளும் பணிகளைத் தடுப்பதே இக்குழுக்களின் நோக்கமாக உள்ளது” என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in