Published : 06 May 2025 05:45 AM
Last Updated : 06 May 2025 05:45 AM
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக, பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒரு மணிநேரம் தாமதமாக பணிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளால் பாதுகாப்பு துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 ஆக பிரித்து, கூடுதல் பணிநேர ஊதியம் (ஓடி), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல சலுகைகளை மத்திய அரசு பறித்துவிட்டது. நடப்பு ஆண்டில் ஓசிஎஃப் தொழிற்சாலைக்கு சீருடைக்கான பணி ஒதுக்கப்பட்டிருந்தாலும், நியாயமான பீஸ்ரேட் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப் மற்றும் துறை சார்ந்த பல்வேறு சம்மேளனங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறையில் வேலைநிறுத்தம் செய்வதற்கு 6 வாரம் முன்பு நோட்டீஸ் வழங்குவது, வாக்கெடுப்பு நடத்துவது போன்ற நடைமுறைகள் உள்ளன. எனவே, அன்றைய தினம் உழைக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஒருமணி நேரம் தாமதமாக பணிக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT