Published : 06 May 2025 06:10 AM
Last Updated : 06 May 2025 06:10 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது: வணிகர் தினமான மே 5-ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் வகையிலான அறிவிப்பு, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
வணிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக தற்போது ரூ.3 லட்சம் வழங்கப்பட்ட வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அமைதியான மாநிலத்தில்தான் தொழிலும், வணிகமும் வளரும். தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் நிம்மதியாக இருக்கும் வகையில் அமைதி மிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி இருக்கிறோம். வணிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் குடிமைப் பணி தேர்வுகளில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மிகவும் கவனமாக திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தொழில் துறையில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலமும் எட்டாத சாதனையை நாம் செய்துள்ளோம்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து நான் சேவையாற்றுவேன். இது உங்களுடைய அரசு. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். வணிகர்கள் அனைவரும் கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். இதுவே என் பெரிய கோரிக்கை. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உட்பட வணிகர் சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT