விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்

உள்படம்: இன்பராஜ்
உள்படம்: இன்பராஜ்
Updated on
1 min read

மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் அவரது பாதுகாவலர் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் ‘ஜனநாயகன்’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நடிகர் விஜய் வந்தார்.

அங்கு திரளான ரசிகர்கள், தொண்டர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது திடீரென ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரை காண உள்ளூர் மக்கள், வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தாண்டிக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு காரில் நேற்று மதியம் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலே காத்திருந்தனர். விமான நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தவெக கட்சி நிர்வாகிகள் சிலரை மட்டும் அனுமதித்தனர்.

இந்நிலையில், விமான நிலையத்தில் காரில் வந்து இறங்கிய விஜய்யை காண ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். அப்போது காருக்கு அருகே நின்றிருந்த ரசிகர் ஒருவர் கையில் சால்வையுடன் திடீரென விஜய்யை நோக்கி ஓடி வந்தார்.

விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, அந்த நபரை பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) பாய்ந்து சென்று தடுத்தனர். அப்போது, பாதுகாவலர்களில் ஒருவர், அந்த ரசிகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினார். இதைத்தொடர்ந்து, அந்த ரசிகரை மற்ற பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்துக்குள் சென்ற விஜய்யிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முண்டியடித்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் விசாரித்ததில், விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவர் மதுரையைச் சேர்ந்த ரசிகர் இன்பராஜ் எனத் தெரிய வந்தது. இச்சம்பவம் பற்றி இன்பராஜ் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்துக்கு வரும் விஜய்யை சந்தித்து சால்வை அணிவிப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். விஜய்யை பார்த்ததும் ஓடிச்சென்று சால்வையை அணிவிக்க முயன்றேன்.

அப்போது பாதுகாவலர்கள் என்னை தடுத்தனர். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனது தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டது குறித்து அப்போது நான் கவனிக்கவில்லை. விஜய்யின் பாதுகாப்புக்காக அவரது பாதுகாவலர்கள் இப்படி நடந்து கொண்டனர். அதனால் எனக்கு வருத்தம் இல்லை’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in