Published : 17 Jul 2018 06:30 PM
Last Updated : 17 Jul 2018 06:30 PM

எங்கள் கிராமம்; எங்கள் காடு; எங்களுக்கே உரிமை: அதிகாரங்களை கையிலெடுக்கும் தமிழக மலை கிராமங்கள்

ஐம்பது அறுபது குடும்பங்கள் வசிக்கும் சின்ன, சின்ன மலை கிராமங்கள்தான். இங்குள்ள கோயில், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடங்களில் குடும்பத்தோடு கிராம சபை அமைத்துக் கூடுகிறார்கள். தன் கிராமம், அங்குள்ள நீர்நிலைகள், வனம், வனவிலங்குகள், அங்கு நடக்கும் விவசாயம், இவற்றுடன் இரண்டறக் கலந்த மக்கள் குறித்தெல்லாம் விவாதிக்கிறார்கள். தங்களுக்குள் 11 முதல் 15 பேர் வரை கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கள் கிராம எல்லைகள், ஆறு, குளம், அருவி உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றியுள்ள காடுகள், மேய்ச்சல் நிலம், சிறுவன மகசூல் உள்ள இடங்கள் இவையிவை என்று வரைபடம் போட்டு, ‘இந்தப் பொதுவள ஆதாரங்களை பாதுகாத்துப் பயன்படுத்தும் உரிமை இக்கிராம சபைக்கு உள்ளது. வாழ்வுக்காக வேளாண்மை செய்வது தடுக்கப்படக்கூடாது!’ என்று பேனர்கள் மூலம் அறிவித்து ஊரின் எல்லைகளில் ஊர்வலமாகச் சென்று வைக்கிறார்கள்.

‘கடந்த டிசம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ளடங்கிய வாளமூலா, பிலாமூலா, பஞ்சமூலா மற்றும் காட்டி மட்டம் கிராமங்களில் இப்படியொரு அறிவிப்பை மக்களே செய்தனர். இதேபோல் கடந்த ஆண்டில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் ஆனைகட்டி, தேவாலா ஹட்டி, புஞ்சைக்கொல்லி, சிறியூர், மசினக்குடி என வரும் 47 கிராமங்களில் இப்படியொரு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இல்லாத விதமாக மலைமக்களே வனத்தையும், வனவிலங்குகளையும், நீர்நிலைகளையும், தன் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் முழு உரிமை பெற்றவர்களாகியிருக்கிறார்கள்!’ என்கிறார்கள்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர் கூடலூர் விவசாயிகள் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர். என்னதான் விஷயம்? எதற்காக இந்த ஏற்பாடு? என்று கேட்டால், மக்கள் அதிகாரங்களை மக்களே எடுப்பதுதான் என்கிறார்கள் இந்த நிகழ்வுகளை நடத்துபவர்கள்.

எப்படி? அவர்கள் சொல்வது இதுதான்:

''ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட வனத்துறையும், அதன் சட்ட விதிமுறைகளும் காடும், காடு சார்ந்த விலங்குகளும், அதில் கிடைக்கும் சிறு வனப்பொருட்களும் காட்டிற்கே சொந்தம், வனத்துறையை மீறி எதுவும் எடுக்கக்கூடாது. அங்குள்ள காட்டைவிட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றன. அதே சமயம் இவர்களை வெளியேற்றிவிட்டு பெரிய, பெரிய எஸ்டேட்டுகளுக்கும், குவாரிகளுக்கும் வர்த்தக ரீதியான விஷயங்களுக்கு காடுகளைக் கொடுப்பதும், அதை அவர்கள் அழிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை இங்கு வசிக்கும் பூர்வகுடிகள் எதிர்க்கிறார்கள்.

மலை மக்களும் காடும், அதன் வளமும் அது உருவான காலத்திலிருந்தே நாங்கள் இங்கே இருப்பவர்கள்; எங்களை வெளியேற்ற யாருக்கும் அதிகாரமில்லை. வனத்தையும், வனவிலங்குகளையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் காலங்காலமாய் காப்பாற்றி வந்தவர்கள்/ வருபவர்கள் நாங்களே!’ என்ற கோஷத்தை முன் வைத்துப் போராடி வருகிறார்கள்.

இது சம்பந்தமான உரிமைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்றப் படியேறியும் உள்ளது. இந்த காரணங்களால் பூர்வீகக் குடிகளாக இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தி வந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக்கப்படாமலே (பட்டா கொடுக்கப்படாமல்) இருந்த வந்தது. இந்த நிலையில் 15.12.2006 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமை அங்கீகார சட்டம் 2006’ பழங்குடிகள் மற்றும் வனம் சார்ந்து வாழும் மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தது.

இந்த சட்டப்படி ‘அட்டவணைக்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களைச் சார்ந்து வாழ்பவர்கள் வன உரிமை அங்கீகாரம் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் கைவசம் வைத்துள்ள வேளாண்மை செய்யும் நிலங்களுக்கு பட்டா பெறுவது மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள காடுகள், ஏரி, குளம், மேய்ச்சல் நிலம், சிறுவன மகசூல் போன்ற அனைத்து சமூகப் பொது வள ஆதாரங்களையும் மீட்டுப் பாதுகாத்துப் பயன்படுத்துவதோடு, இதற்கான உரிமையும் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. தவிர காடுகளையும், இயற்கை பொதுவள ஆதாரங்களை வணிகத்துக்காகவும், லாபத்துக்காகவும் பயன்படுத்துவதை இச்சட்டம் தடுக்கிறது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கிராம மக்களுக்கும், கிராமப் பஞ்சாயத்துகளுக்குமே உள்ளது. மக்கள் பாரம்பர்யக் கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்கின்றது. முடிவெடுக்கும் அதிகாரமும் இவர்களுக்கே உள்ளது. எந்த இடத்திலும் இவர்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களை விற்க முடியாது. தங்கள் உறவுகளுக்குள் மட்டும் பயன்படுத்தலாம்.

‘இந்த வகையில் அந்தந்த கிராமங்கள் (ஊராட்சிகள் அல்ல) கிராம சபை கூட்டங்கள் போட்டு, வன உரிமைக்குழுக்கள் (ஏற்கெனவே வனத்துறை உருவாக்கியிருக்கும் வனக்குழுக்கள் அல்ல) உருவாக்கி, தங்கள் நிலம், அதன் பயன்பாடு, நீர்நிலைகள், காடு, கானுயிர்கள் குறித்த இனங்கள் பற்றிய நிலை குறித்த தீர்மானம் இயற்றி, அதை ஆர்.டி.ஓ தலைமையில் உள்ள வட்டார ஒருங்கிணைப்புக் குழுவிடம் அளிக்க வேண்டும். அந்தக் குழு அதைச் செயல்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கமிட்டிக்குத் தர வேண்டும். அதில் முடிவெடுக்க முடியாத அம்சங்கள் தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில கண்காணிப்புக் குழுவிடம் செல்லும். மேற்சொன்ன குழுக்களில் எல்லாம் வனத்துறை, வருவாய்த் துறை, மக்கள் பிரதிநிதிகள் அடங்கியிருப்பர். இந்த ஒட்டுமொத்த குழுக்களையும் உருவாக்குவது, நிர்வகிப்பது ஆதிதிராவிட நலத்துறையாக இருக்கும். இந்த அடிப்படையிலேயே தற்போது நீலகிரி உள்ளிட்ட தமிழக மலை கிராமங்களில் இப்படிப்பட்ட வன உரிமைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, கிராம சபைகள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என்கிறார் இதனை முன்னின்று செய்யும் கூடலூர் விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.செல்வராஜ்.

மேலும் அவர் பேசும்போது, ''இந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் ஊருக்குள் கல், கரி, மண் எது எடுப்பது என்றாலும் வன உரிமைக்குழுவிடம் கேட்க வேண்டும். புலிகள் காப்பகம், சரணாலய விஸ்தரிப்பு எது செய்வது என்றாலும் மக்கள் சபையின் ஒப்புதல் பெற வேண்டும். இப்படிச் செய்தால் தங்கள் அதிகாரம் பறிபோய் விடும் என்பதால் தமிழக வனத்துறையினர் தன் கைப்பாவையான சில என்ஜிஓக்களை வைத்து இச்சட்டம் அமல்படுத்தினால் காடுகள் அழியும் என்று பொய்ப்பிரச்சாரங்கள் செய்தனர். கோர்ட்டுக்கும் சென்றனர். அதில் மக்களுக்கு சாதகமாகவே தொடர்ந்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கடந்த 2013-ம் ஆண்டில் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலே இருந்து வந்தனர். அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலம் கச்சரொளி முழுக்க, இந்தச் சட்டத்தை அமல்படுத்தி அங்குள்ள மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டது அந்த அரசு. அதேபோல் கேரளத்திலும் திருச்சூர் போன்ற பெரிய ஏரியாவிலேயே இச்சட்டத்தை அமல்படுத்தி மக்களுக்கு பட்டா கொடுத்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் என்ன நிலைமை என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவர்கள் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுடன் சேர்ந்து எங்களைப் போன்ற சில அமைப்பினர் தாங்களே மக்களை களத்தில் இறக்கி இக்குழுக்களை அமைத்திருக்கிறோம். நீலகிரியில் மட்டுமல்ல கன்னியாகுமரி, விழுப்புரம், சத்தியமங்கலம், கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கிராம சபைகள், வனக்குழுக்கள் உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம். இதன் மூலம் இப்போதுதான் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து பட்டா கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி இதுவரை சுமார் 7500 குடும்பங்களுக்கு மட்டும் சுமார் 2000 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க இப்படி பழங்குடி மற்றும் மலை மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டிய சுமார் 19 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன'' என செல்வராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x