“நீட் விவகாரத்தில் திமுக சரண்...” - மா.சுப்பிரமணியன் கருத்தை முன்வைத்த தமிழிசை

பாஜக தலைவர் தமிழிசை | அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பாஜக தலைவர் தமிழிசை | அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
2 min read

சென்னை: “தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக - பாஜக கூட்டணியால்தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் எல்லாமே விளம்பரமாக இருந்து கொண்டிருக்கிறது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பாராட்டு விழா நடத்துவதற்கு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனில் பல்கலைக்கழகங்கள் தலைமை கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வுக்காக நடத்தப்படும் சோதனைகள், தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோரால் நன்றாக படிக்கும் மாணவர்களின் வாய்ப்பு பறிபோய்விடக் கூடாது என்பதற்காக நடத்தப்படுகின்றன. ஆனால், மாணவர்கள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் இங்கே உள்ள அதிகாரிகளும், அந்த தேர்வை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்தான் தவறு செய்கின்றனர். வேண்டுமென்றே ஓர் உயரிய தேர்வின் புனித தன்மையை கெடுப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நீட் தேர்வை தைரியமாக எதிர்கொண்ட மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருக்கின்றனர். இதுவே திமுகவின் தோல்வி தான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்தை தாங்கள் தான் போடுவதாக தெரிவித்தனர். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு விலக்கு ஏற்படுத்த அதிமுக - பாஜக கூட்டணியால் தான் முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இதன்மூலம் திமுக சரணடைந்திருக்கிறது.

அதிமுக - பாஜக கட்சிகள் பலம் பொருந்திய கட்சிகளாக மாறிவருவதை அமைச்சர் மா.சுப்பிரமணியனே ஒப்புக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் வருங்காலம் எங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி” என்று தமிழிசை கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன? - “நீட் விலக்கு பெறுவோம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் விளக்கை பெறுவோம் என்கின்ற வகையிலான அறிவிப்பு இருக்கின்றது. நீட் விலக்கு பெற தமிழக முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது.

இதில் அக்கறை உள்ளவர்களாக இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in