எல்.முருகன் - கோப்புப் படம்.
எல்.முருகன் - கோப்புப் படம்.

தமிழகத்தில் தங்கியுள்ள பாக்., வங்கதேசத்தினரை வெளியேற்ற எல்.முருகன் வலியுறுத்தல்

Published on

சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

“சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வளைதள பதிவில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த திவிரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு பின்னால் 140 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தீவிரவாதத்தின் ஆணி வேராக செயல்படும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும். அரசியல் பேதங்களை கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரவாதத்தை வேரறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்தவகையில் சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்.

அதேபோல் நமது ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பு பற்றியும் விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீதும் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in